JustPaste.it

whatsappimage20240616at102145pm1.jpeg

CLICK TO READ

                                               நிமிர்ந்து நில்

      

                           அத்தியாயம்-1

      லைந்து கிடந்த நோட்டையும் புத்தகத்தையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கயல்விழி. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவளுக்கு பள்ளி திறந்து ஒரு மாதம் ஆகியும், இன்று தான் புது புத்தகம் வழங்கப்பட்டது. புது புத்தகத்தின் வாசம்  அவள் நெஞ்சுகுழிக்குள் இறங்கியது. மூச்சை இழுத்து சுவாசத்தைஉள்வாங்கியவள் மலர்ந்த முகத்தோடு வெளி விட்டாள். ஒவ்வொரு புத்தகமாக எடுத்து பிரித்து பார்த்துக் கொண்டாள். தவறுதலாக மடங்கியிருந்த சில பக்கங்களை எடுத்து விட்டு மூடினாள்.

    சில பக்கங்களை ஆச்சரியத்தோடு வாசிக்கத் தொடங்கினாள். கயல் அப்படி தான் சின்ன வயதிலிருந்தே கீழே ஏதாவது நியூஸ் பேப்பர் கிடைத்தாலும் அதனை உடனே வாசித்து விடுவாள். அதனாலோ என்னவோ குப்பத்தில் பிறந்த அவளுக்கு படிப்பின் மீது அதிக நாட்டமிருந்தது.  பழைய நியூஸ் பேப்பர் வழியாக உலக விஷயங்கள் தெரிந்து கொண்டதால், குப்பத்தில் பலரின் தவறுகளை சுட்டிக்காட்டி அவள் வாதிடும் போதும், குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கணவரை அதட்டி பேசும் போதும் அவள் தாய் காமாட்சி ஓடி வந்து ஆசையாக நெட்டி முறிப்பாள்.

       ஐயோ செல்லம் எப்படிடா இப்படியெல்லாம் பேசுற

     நீ வாயை மூடிட்டு இருந்ததால தாம்மா இப்படி உன்ன அடிக்கிறாரு அப்பா.நீ ஏம்மா அடிவாங்கிட்டு அப்படியே நிக்கணும்.நீ அப்படி என்ன தப்பு பண்ணிட்டா என எதிர் குரல் வர, இப்போதெல்லாம் முருகேசன் குடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தாலும் காட்டு கத்து கத்தி குப்பத்தை திணறடிப்பதில்லை. அதை நினைத்து கயலுக்கும் பெருமை தான். தான் படித்து பெரிய வேலைக்கு சென்று குப்பத்து குழந்தையின் வாழ்க்கையையே மாற்றி விட வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்பவள் தான் இந்த பதினான்கு வயது சிறுமி கயல்.

      முன்னாலிருந்த புத்தகத்தை பரபரப்போடு எடுத்து தன் கிழிந்து நைந்து போன பேக்கில் அடுக்கினாள். பையைத் தோளில் மாட்டிக்கொண்டு நிமிர்ந்தவள் கண்களில் மேஜை மீது இருந்த சாக்பீஸ்பட்டது. பள்ளியில் பிள்ளைகள் இருக்கும் போது யாரும் ஆசிரியரின் பொருளை தொடக்கூடாது. பள்ளி விட்டு வெகு நேரமாகியிருந்ததால் மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் சென்று விட மெதுவாக மேஜை அருகில் வந்த கயல் சின்ன அளவில் இருந்த ஒரு சாக்பீஸ் துண்டை எடுத்து பிளாக்போர்டில் மனதில் தோன்றியதை எழுத ஆரம்பித்தாள்.

       கயலுக்கு டீச்சர் ஆக வேண்டும் என்பது தான் அவளோட ஒரே ஆசை. குப்பத்தில் கூட சின்ன குழந்தைகளை கூட்டி வைத்து தன்னை ஆசிரியராக நினைத்து பாடம் சொல்லிக் கொடுப்பது தான் அவளோட ஒரே பொழுது போக்கு. பள்ளி விட்டு வீட்டிற்கு சென்றதும் நேராக ஆற்றங்கரைக்கு ஓடிவிடுவாள். ஆற்றின் பக்கத்திலிருக்கும் பாறை மீது ஏறி அமர்ந்து கொள்வாள். ஆற்றங்கரைக்கு விளையாட வரும் அத்தனை பசங்களையும் கூட்டி வைத்து கதை சொல்ல ஆரம்பித்து விடுவாள். அப்படியே பழக்கப்படுத்தி இப்போதெல்லாம்  கயலக்கா எனக்கு எழுத சொல்லிக் கொடேன் என வாண்டுகள் கேட்க ஆரம்பித்து விடும். அளவு குப்பத்து குழந்தைகளுக்கு  ஆசானாகி போனாள் கயல்.

        அப்படிப்பட்டவள் கையில் கிடைத்த இந்த அற்புதமான வாய்ப்பை நினைத்து குதூகலித்தாள். பள்ளியில் மீந்து போன சிறு சாக்பீஸ் துண்டுகளை எடுத்துக் கொண்டு போய் ஆசையாக பாறையில் எழுதி படித்துக் கொடுத்த கயலுக்கு முதல் முறையாக பிளாக் போர்ட்டில் எழுத எழுத உள்ளம் பூரிப்பால் நிறைந்து போயிருந்தது. தனியாக சிரித்துக்கொண்டாள் தன் எழுத்தை எட்ட நின்று பார்த்து ரசித்தாள்.

           நாளையிலிருந்து எல்லார் முன்னிலையிலும் இந்த கரும்பலகையில் எழுதும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது. என்ற எண்ணமே அவளுள் தேனாக இனித்தது. எட்டாம் வகுப்பு வரை கயல் குப்பத்துக்கு பக்கத்தில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் பயின்றாள். அங்கு எல்லாரும் குப்பத்து மாணவர்களாக இருந்ததால் படிப்பில் படுசுட்டியான இவள் ஒருவித தலைமை தோரணையில் தான் வலம் வருவாள். அங்கு இருந்த ஆசிரியர்கள். கயிலை தான் முதன்மைப்படுத்தி பேசுவதால் எல்லார் மத்தியிலும் பெருமையாக கம்பீரமாக வலம் வந்தாள் கயல்.

        ஆனால் உயர் கல்விக்காக அம்மாவிடம் பிடிவாதம் பிடித்து இந்தப் பள்ளியில் சேர்க்க வந்த போது ரொம்ப கௌரவமாகவே உணர்ந்தாள். தன் குப்பத்திலிருந்து ஒன்பதாம் வகுப்புக்கு அதுவும் டவுண்க்கு படிக்க வரும் ஒரே மாணவி அவள் தான். இந்த உணர்வே அவளுள் ஆயிரம்  மகிழ்வைத்  விதைத்திருந்தது.

          அம்மா படிப்பை நிறுத்தி விட்டு ஏதாவது வசதி படைத்தவர் வீட்டில் எடுபிடி வேலைக்கு சேர்க்க தான் நினைத்தாள். ஆனால் கயல் மூன்று நாள் அன்ன ஆகாரம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தாள்.. கூடவே அவள் மேல் அன்பு கொண்ட தமிழாசிரியர் நிர்மலாவை அழைத்து வந்து பெரும்பாடுபட்டு அம்மாவை சம்மதிக்க வைத்தாள். யூனிபாமும், நோட்டும் தானே வாங்கி கொடுத்து விடுகிறேன் என்று சொல்லித்தான் வந்த ஆசிரியர் அம்மாவை சம்மதிக்க வைத்தார்.

         பள்ளிக்கு வந்த முதல் நாள் ரொம்ப சந்தோஷத்தோடு கண்ணில் மிகுந்த ஆர்வத்தோடு தான் வகுப்பறைக்குள் நுழைந்தாள். ஆனால் வசதி படைத்த மாணவர்களின் கண்ணில் ஒரு அற்ப புழுவைப் போல தெரிந்தாள். தன் குப்பத்து நாற்றமும் தன் அலங்காரமும் அவர்களை முகம் சுழிக்க வைப்பதை உணர்ந்தாள்.  மனம் சுருங்கி தான் போனாள். எல்லா மாணவிகளும் தன்னிடம் பேசாமல் ஒதுங்கவே,..... கயல் சோர்ந்து போனாள். காலையில் எத்தனை ஆர்வத்தோடும் சந்தோஷத்தோடும் உள்ளே நுழைந்தாளோ அந்த ஆர்வம் சந்தோவும் அத்தனையும் மொத்தமாக வடிந்தவளாக வகுப்பறையை விட்டு வெளியேறினாள்.

         வீட்டிற்கு  சென்றும் அவளால் பழைய நிலையை அடைய முடியவில்லை நிராகரிப்பு.... அதுவும் தன் வயதை ஒத்த மாணவர்களிடமிருந்தே வந்த நிராகரிப்பு கயலை ரொம்பவே பாதித்து விட்டது என்றாலும் தாய் பலமுறை வற்புறுத்தி கேட்டும் கயல் வாய் திறக்கவே இல்லை.

      ஒருவேளை நாம் சொல்லப்போய்... நமக்கு இந்த படிப்பெல்லாம் தேவையில்ல கயல் நம்ம நிலமைக்கு ஏதாவது வேலைபாருணு சொல்லிட்டா. அம்மா சொல்லாட்டாலும் பாட்டி நிச்சயமா சொல்லும். அதுனால பேசாம இருக்கிறது தான் சரி என தீர்மானித்து அமைதியாகிப் போனாள் கயல்.

          நான்கு நாட்கள் இப்படியே செல்ல…… கயல் பலர் முன்னிலையிலிருந்தாலும் தனித்து விடப்பட்ட ஒற்றைப் பறவை போல ஒதுங்கி இருந்தாள். விளையாட்டிலும் சேர்த்துக் கொள்ளாமல்,... ஒதுங்கி நின்று ரசித்தாள். சாப்பிடும் போதும் ஒற்றையாய் ஒதுங்கி நின்ற அவள் வேப்ப மரத்தின் பக்கத்தில் அமர்ந்து கொள்வாள். சாப்பாட்டு நேரம் அவர்கள் இருக்கும் திசை பக்கமே செல்வதில்லை. காரணம் தான் கொண்டு வரும் பழைய கஞ்சியின் வாசனையை கண்டால் ஏதாவது வலிக்க பேசுவார்கள் என்றே ஒதுங்கிக் கொண்டாள். 

         எத்தனை நாள் தான் இப்படியே இருக்க முடியும்... அவள் நாளும் மாறின.

     பத்தாம் நாள் மலர் தான் முதன்முறையாக அவளிடம் வந்து பேசினாள். என்றாலும் அந்தப் பேச்சில் துளி அளவு கூட அன்பு இல்லை. அருவருப்பு தான் இருந்தது.

           இந்தா.....

      ................

      பக்கத்துல இருக்க முடியல... நாற்றம் குடலை புடுங்குது. கொஞ்சம் தள்ளி இரு……

      அவள் பேசாமல் இருந்ததை விட பேச்சின் அருவருப்பு அவளுள் வேதனையை கிளப்ப கண்ணீர் முட்டிக்கொண்டு வர கதறி விட்டாள் கயல்.

       அவள் கண்ணில் கண்ணீரை கண்டதாலோ, அல்லது அவள் மேல் இரக்கம் கொண்டோ தெரியவில்லை. சத்யா ஓடி அருகில் வந்தாள்.

       என்ன மலர் பேசுறா….. நீ வேணா பெரிய தொழில அதிபரோட  மகளாயிரு. வாசனையும் ஆழகுமா ஸ்கூலுக்கு வா. அதுக்காக பாவப்பட்ட கயலோட மனசை சாகடிக்காத. உன் விலையுயர்ந்த வாசனை திரவியம் மட்டும் இல்லணா நீயும் வியர்வையில் நாறிப் போய் தான் இருப்பா. இந்த வியர்வை ஸ்மெல் உனக்கு பிடிக்கலைணா நீ என் இடத்துல போய் இரு நான் இங்க இருக்கேன்.

      மலர் முகத்தை சுளித்துக் கொண்டு அடுத்த பெஞ்ச்க்கு இடம் மாற சத்யா கயல் அருகில் அமர்ந்தாள். ஆதரவாக பேசினாள். கலங்கிப் போயிருந்த கண்களை துடைத்து விட்டாள். கையை அழுத்தமாகப் பிடித்து தன் அன்பைக் காட்டினாள்.

       அதோடு அவள் நின்று விடவில்லை. சத்யா நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண். அவள் அப்பா ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறார். அவர்களுக்கு இவள் ஒரே மகள் என்பதால் கேட்டவுடன் வாங்கிக் கொடுக்கும் அளவு வீட்டில் வசதியிருந்தது. அன்று மாலையில் போய் தன் தாயிடம் கயல் பற்றி பேசி ஒரு மெடிமிக்ஸ் சோப், பாண்ஸ் பவுடர் என வாங்கி வந்து கயலிடம் கொடுத்தாள். அவளின் அறிவுரைப்படி கயல் அவள் கொடுத்த பொருளை வீட்டிற்கு கொண்டு வந்து சோப்பை உடைந்து போன ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் பத்திரப்படுத்திக் கொண்டாள். காலையில் ஸ்கூலுக்கு போகும் முன் குளித்து பிரஸாக வர ஆரம்பித்தாள். கயல் ரொம்ப மெனக்கெட்டு தன்னை மாற்றிக் கொண்டாலும் அவளுடன் படித்த மாணவர்களால் அவளை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. குப்பத்திலிருந்து வந்தவள் என்ற நிலையிலே அவளைப் பார்க்க தொடங்க கயல் ரொம்பவே சோர்ந்து போனாள்.

        அன்று, ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தினார். அடிப்படையான பல கேள்விகள் கேட்டு பதில் எழுதச் சொன்னார். அதில் முழு மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றார் கயல். அன்றிலிருந்து எல்லார் பார்வையும் ஆசிரியர் உட்பட அவள் பக்கம் திரும்பின. முழு மதிப்பெண் எடுப்பது இவள் வாடிக்கை என்பதால் இவளுக்கு அது எந்த மாற்றத்தையும் கொடுக்கவில்லை. ஆனால் கயல் வாழ்வில் இருந்த நிராகரிப்பு கொஞ்சம் குறைந்தது. என்றே சொல்லலாம். அதிலும் சத்யாவின் சந்தோசம் மிக பெரிதாக இருந்தது.

        கயலை நய்யாண்டி செய்தவர் முன்னால் போய் பேப்பரை விரித்து காட்டி முகத்தை சுழித்துக் கொண்டு அவள் கோபத்தை தீர்த்துக் கொண்டாள். ஆனால் கயலோ இனியாவது தன்னிடம் சகஜமாக பேச மாட்டார்களா என ஏக்கத்தோடு அவர்களை நோக்கினாள்.

         இப்போதெல்லாம் எல்லா ஆசிரியர்களும் தன் பக்கமே பார்ப்பதை உணர்ந்து தான் இருந்தாள் கயல் . இன்று தான் முதன் முறையாக வகுப்பு ஆசிரியர்கள் கயலை அழைத்து வகுப்பில் வகுப்பு வீடராக அவளை அறிமுகம் செய்து வைத்தார். எல்லார் முன்னிலையிலும் ஆசிரியர் இவ்வாறு செய்தது கயலிடம் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது. எல்லாரை விடவும் தரம் தாழ்ந்தவள் என்ற தாழ்வு மனப்பான்மையை அது உடைத்து எறிந்தது. அந்த நொடி அவள் உள்ளத்தில் நம்பிக்கை ஒளி ஒன்று ஒளி வீசி கொண்டிருந்தது.

      தான் எதையோ சாதித்து விட்டதாக உணர்ந்தாள். வகுப்பில் மாணவர்கள் மத்தியின் பேசவே அங்கீகாரம் கிடைக்காத எனக்கு என் படிப்பு அத்தனை பேருக்கும் லீடராக்க ஆக்கியுள்ளது என்ற எண்ணம் அவளுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. எத்தனையோ வசதி படைத்த மாணவர்கள் மத்தியில் தனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக தான் அவள் கருதினாள். இன்னும் முன்னேற வேண்டும் படிப்பில் சாதித்தே ஆக வேண்டும் என்ற வெறியை அந்த பிஞ்சு உள்ளத்தில் அன்றைய நாள் விதைத்துச் சென்றது.

        பழைய நாட்களை மன அலையில் ஓட விட்ட கயல் நாளை முதல் தான் யாரிடமும் அனுமதி பெறாமல் எல்லார் முன்னிலையிலும் இந்த சாக்பீஸை எடுத்து கரும் பலகையில் எழுதலாம். அதற்கான அங்கீகாரத்தை இன்று வகுப்பாசிரியர் தனக்கு கொடுத்திருக்கிறார் என்ற நினைப்பே அவள் மனதில் புதிய நீரூற்றை உற்பத்தி செய்தது.

         ஒரு குறும்புச் சிரிப்போடு சாக்பீஸை மேஜை மீது வைத்து விட்டு டெஸ்டரை எடுத்து தான் இதுவரை கரும்பலகையில் எழுதிய வரிகளை அழிக்க முயன்றாள்.

       அப்போது தான் அவள் இதுவரை எழுதிய வரிகள் கண்ணில் பட்டன.

      நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்துவிட்டால் உதிர்ந்து போன பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்…….

       நேற்று படித்த கட்டுரையில் அவள் மனதை கவர்ந்த அருமையான வரி அது.

      அதை அழிக்க மனமின்றி ஒரு வித தயக்கத்தோடு அதை பார்த்து நின்றாள்.

    எதிர்காலம் தன் பல வருட கனவை சீக்கிரத்தில் அழிக்கப் போகிறது எனத் தெரியாமலே……

 

                                 அத்தியாயம் தொடரும்…….

 

CLICK TO READ