அத்தியாயம்-1
கொட்டும் மழையில் மொத்தமாய் நனைந்தவளாய் தன் பெண்மையையும் உயிரையும் காப்பாற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் தன் சக்தி மொத்தத்தையும் கொடுத்து அந்த சாலையில் மொத்த ஊரும் உறங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவு நேரத்தில் ஓடிக்கொண்டிருந்தாள் பிரியங்கா..
அவள் பின்னால் யார் என்றே தெரியாத முரடர்கள் அவள் பெண்மையை சூறையாடி விடுவதாக கங்கணம் கட்டிக் கொண்டே அவளை விரட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். கூச்சல் போட்டுக் கொண்டே அந்த ஆளே இல்லா சாலையில் ஓடிக்கொண்டிருந்தாள் பிரியங்கா. மழையின் தாக்குதலால் மொத்தமாய் நனைந்திருந்தாள். குளிரின் தாக்கத்தாலும் பயத்தின் கொடூரத்தாலும் நடுநடுங்கி கொண்டே இருந்தாள் பெண்ணவள். அவளின் அசுர ஓட்டத்தில்,... முன்னால் வந்தவரை கவனிக்காமல் யாரின் மேலோ மோதிக்கொள்ள... சட்டென நிமிர்ந்தவள் அவன் மார்பில் தன் உடல் படர்ந்து இருப்பதை பார்த்து விலகத் துடிக்க... அவன் கரம் கண நேரத்தில் அவள் இடையை வளைத்தது.
மிரண்ட விழியோடு அவனை நோக்கினாள். பின்னால் தன்னை துரத்திக் கொண்டு வந்த தடியர்களுக்கு சற்றும் குறையாத தேகத்தில் இருந்தான் தன் முன்னால் நின்றவன். ஆறடிக்கு அதிகமான உயரம். நல்ல எக்சசைஸ் பாடி. முறுக்கேறிய மீசை. நாடியை கொத்தாக அடைத்திருந்த தாடி. ஒரு அழுக்கு லுங்கி. ஒரு கிழிந்த பனியன். ஆனால் உழைப்பால் முறுக்கு ஏறிய உடல்வாகு. இதுவரை தன்னை விரட்டி வந்தவர்களை பயம் கலந்த விழியால் ஒரு கணம் பார்த்தவள்... அதே பயம் கலந்த விழியோடே தன் அருகில் நின்றவனையும் பார்த்தாள். அவள் பயப்படும் அமைப்பில் தான் அவனும் இருந்தான்.
விழித்துக் கொண்டு மொத்த பயத்தின் உருவமாய் மாறிப்போய் தன்னை நெருங்கி நிற்பவளை ஒரு கணம் பார்த்தான். உதடுகள் விம்ம... உடைகள் எல்லாம் உடலோடு ஒட்டிக்கொள்ள... ஒரு மார்க்கமாக தான் இருந்தாள் பெண்ணவள். அவளை ஏற இறங்க பார்த்தவன் முன்னால் அவளை துரத்திக் கொண்டு வந்தவர்களை பார்த்தான். வேட்டைக்குச் செல்லும் வேங்கை போல் வெறிகொண்டு நின்றனர் அந்த வெறியர்கள். அவர்கள் கையில் கிடைத்தால் புலியின் கையில் கிடைத்த புள்ளிமானாகி போவது நிஜம். ஒரு கணம் சிந்தித்தவன் தன் தடிமனான காலை எடுத்து அவர்களை நோக்கி வைக்க அந்த இருளும் அந்த இருளை கிழித்து கொண்டு வந்த சின்ன ஒலியிலும் அவன் உருவத்தை மங்கலாக பார்த்தவர்கள் ஒரு அடி பயத்தில் பின் வைத்தனர்.
இப்போது பிரியங்கா அவனை பயம் கலந்து பார்த்தாள். அவன் கண்ணில் தெரிந்த கோரத்தையும் அவன் பற்களில் கடிகடிப்பையும் அவன் கோபத்தால் ஆடிய கன்னங்களின் துடிதுடிப்பையும் பார்த்தவள் பயத்தில் அவனிடமிருந்து விலகி ஒரு அடி எடுத்து வைத்து நீங்கி நின்று கொண்டு... கிலியோடு அவனைப் பார்த்தாள்.
இவன் உண்மையில் தன்னைக் காக்க வந்த ராமனா?... இல்லை காவு வாங்க வந்த ராவணனா? என்ற சந்தேகம் அவளுள் எழ பய உணர்வோடு நடுக்கத்தோடும் தான் அவனைப் பார்த்தாள். அதே நேரம் அடி மீது அடிவைத்து அவன் முன்னோக்கி நகர... அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்த அனைவரும் தலைக்தெறிக்க ஓடி மறைந்தனர். ஒரு நிமிடம் அவர்கள் போகும் திசையை பார்த்து நின்றவன் சட்டென திரும்பி இவளை நோக்கி வர....
பயத்தில் வெளிறி போய் நின்றிருந்தாள் பிரியங்கா. அவள் மனது இது சாத்தியமா... இவன் ஒரு ஆள். அவர்கள் 10 தடியர்கள். இவனின் ஒற்றை முறைப்பிற்கே ஓடிவிட்டார்கள் என்றால்... இவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும். உண்மையில் இவன் யார்?... நல்லவனா!.... இல்லை கெட்டவனா!.... உள்ளத்துக்குள்ளே பட்டிமன்றம் ஓடிய நேரம். இதுவரை ஒத்த வார்த்தையும் பேசாமல் கண்களாலும் உடல் மொழியாலும் பயமுறுத்திக் கொண்டிருந்த அவன்.... தொண்டையை செறுமியவாறு...
“எங்க போகணும்?..”
அவன் கனத்த குரலும்… அவன் உடல் மொழியிலும், வெட்டப்படாத தாடியிலும் பயந்து போனவள் திக்கித் திணறி கொண்டு நிற்க...
“கேட்பது காதுல விழல.?...”
கடும் குரலோடு வார்த்தை வந்து விழ... நடுங்கி தான் போனாள் பிரியங்கா. அந்த இரவு... ஆளில்லாச் சாலை. தனிமையில் அவள். அவள் அருகில் யார் என்றே தெரியாத முரட்டு ஆண்மகன். அவனை நம்பவும் முடியாமலும்....நம்பாமல் இருக்கவும் முடியாமல்...விழி விரிய பார்த்தாள். பயத்தில் உடலெல்லாம் ஆட அவளை அறியாமலே மயக்கம் வந்து கவ்விக்கொள்ள விழப் போனவளை ஓடி வந்து அணைத்தவன்...
“என்னாச்சு..!...”
அவள் கன்னத்தை தட்ட சுயநினைவடைந்தவள் மெதுவாக அவனிடமிருந்து விலகப் பார்க்க.. அவன் பிடியை இறுக்கிக் கொண்டு சாலையின் ஓரத்தில் இருந்த திட்டில் அவளை அமர வைத்தான்
இது பயத்தில் வந்த மயக்கமா? அல்லது பசியில் வந்த மயக்கமா? ஒருமுறை அவளை ஆழ்ந்து பார்த்தவன் தூக்கமின்மையால் சோர்ந்து இருந்த கண்ணையும், காய்ந்து போன அவள் உதட்டையும் பார்த்து சட்டென எழுந்து கொள்ள ஒரு நொடி பயந்தவள்...
“ஏ…ஏ…எங்க போறீங்க…”
“இரு… வரேன்...”.
“இல்ல...இல்ல....நான் நானும் வரேன்”.
என அவன் பின்னாலேயே அவளும் செல்ல...அவளை திரும்பி ஒருமுறை பார்த்தவன். என்ன நினைத்தானோ....
அடுத்த நொடி முன்னோக்கி நடக்க ஆரம்பித்தான். காற்றின் வேகத்தில் அவன் சட்டையும்,சாரமும் காற்றில் பறக்க...அதை பிடித்து அமர்த்தி… மேல் தூக்கி லுங்கியை கட்டியவன். நடக்க தொடங்கினான்.அவனுடன் நடக்கவும் பயமாக இருக்க, ஒரு அடி பின்னால் நடந்தவள் அவன் தன்னை தனியாக விட்டுப் போய்விடக் கூடாது என்ற துடிப்பிலும் ஓட்டமும் நடையுமாக அவன் பின்னே வந்து கொண்டிருந்தாள்.
இரவு பயணிகளுக்காக டீ விற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்த சிறுவனைப் பார்த்ததும் அருகில் வந்து இரண்டு டீயை வாங்கி ஒரே பேப்பர் கப்பில் ஊற்றி நீட்ட சிறு தயக்கத்தோடு அதை வாங்கிக் கொண்டவள்.அதை குடிக்கலாமா?... வேண்டாமா?... என ஒரு நொடி யோசித்து வேண்டாம். ஒருவேளை இதுல மயக்க மருந்து கலந்து நம்மளை மயக்கப்படுத்தி எங்காவது கொண்டு போய்ட்டா... ஐயோ....வேணாம்ப்பா பேசாம குடிச்சது போல நடிச்சு தூர உத்திடுவோம்.
அவள் மூளை அதிவேகமாக யோசிக்க கொஞ்சம் கொஞ்சமாக அவன் பார்க்கா வண்ணம் கீழே ஊற்றிவிட்டு நெளிந்த சிரிப்போடு கப்பை அவனிடம் நீட்டினாள். அவளை சந்தேகம் முடிச்சோடு பார்த்தவன்...
அவள் புறம் இருந்த பார்வையை திருப்பாமலே கையில் அவள் கொடுத்த காகிதக்கப்பை நசுக்கி குப்பை தொட்டியில் போட்டான். எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் குடிச்சா. இதுதான் அவன் உள்ளம் அவனிடம் கேட்டுக் கொண்டிருக்க..
கண்டு பிடிச்சிட்டான் போல...எண்ணியவள்.
அவன் பார்வையை சந்திக்க முடியாமல் தலை குனிந்தவள்.
என் மேல ஒன்னும் தப்பில்லை. தெரியாத இடத்துல தெரியாத மனுஷர் கொடுக்கிற டீயை எப்படி பயம் இல்லாமல் வாங்கி குடிக்கிறது.
என்றதும் எரிச்சல் வந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல்...
“அடிப்பாவி...கையில் இருந்த ரூபாயை உனக்கு செலவுபண்ணா...அதை மொத்தமா வீணாக்கிட்டு வியாக்கியானமா பேசுற...தேவைதான்...எனக்குஇது. தேவைதான். மூட்டை தூக்கிட்டு வந்தவன் களைப்பு போக ஒரு டீ குடிக்காமல் உனக்கு வாங்கி கொடுத்தேன் பாரு. என்னை...என் காலில் கிடக்கிற தேய்ந்த செருப்பால தான் அடிச்சுக்கணும்.”
அவன் மனதுக்குள் சொல்லிக் கொண்டாலும் ஏனோ அவள் முன் சொல்ல தோன்றாமல் அவளை முறைத்துக் கொண்டு முன்னோக்கி நடந்தான். எதுவும் சொல்லாமல் அவன் சட்டென திரும்பி வேகமாக நடக்க.. பேக்கை தூக்கிக்கொண்டு அவளும் பின்னால் ஓடினாள்.
“யாரோட முகத்தில முழிச்சேனோ...இப்படி வந்து மாட்டிக்கிட்டேனே”.
தலையில் அடித்துக் கொண்டே அவன் நடக்க... மிரண்ட விழியோடு அவனை தொடர்ந்து கொண்டிருந்தாள் பிரியங்கா. மெயின் ரோடு வரை திரும்பி பார்க்காமலே அதிவேகமாக சென்றவன். அவள் மறுபடியும் தன்னை தொடர்ந்து வருவதை கண்டு கோபத்தோடு திரும்பினான்.
“இப்ப எதுக்கு என் பின்னால வர..”
“அது..!..வந்து....”.
பெண்ணவள் பயம் கலந்து பேச....முரட்டு ஆண்மை மூர்க்கமாக அவளை நெருங்கி வந்து சட்டை காலருக்குள் இருந்த கைகுட்டையை உருவி எடுக்க...
பயந்து போனவள் ஒரு நொடி பின்வாங்கி...மிரட்சியோடு நிற்க...
தன் தலையிலேயே அடித்துக் கொண்டவன்.
“சொல்லு...எங்க போகணும்...”
சொல்லணுமா?.... சொல்லக்கூடாதா?.... சந்தேகம் மனதில் கேள்வியாய் கேட்க... கேட்கிறாரே... இப்ப என்ன சொல்லலாம்.என தடுமாறி நின்றவளை பார்த்தவன் .
“போகணும் தானே...இல்ல நைட் முழுசும் இதிலேயே நிக்க போறியா?... முதல்ல ஒரு கூட்டம் கழுகு வந்துச்சு. இனிமேலயும் நின்னியணா ஒரு கூட்டம் சிறுத்தை வந்து பயமுறுத்தும். எப்படி வசதி...”
அதே கர்ண குரலில் கேட்க நடுங்கியவள்.
“இல்ல...இல்ல...போகணும். போக...போகணும்.”
“எங்கணு சொன்னாதானே போக முடியும்”.
“ஆமா....ஆமா....
“அப்போ சொல்லு.”
“கரிசல்பட்டி”.
“அதுக்கு இப்ப இந்த நேரம் எந்த பஸ்ஸும் கிடையாது”.
“அதனாலதான் இப்படி வந்து மாட்டிக்கிட்டு…”
அவள் நெளிந்து கொண்டு சொல்ல..”
அவளை ஒரு முறை பார்த்தவன். யோசனையில் ஆழ்ந்தான்.
சும்மா சொல்லக்கூடாது. பிரியங்கா அன்று பழுத்த பலாப்பழம் போல் இருந்தாள். பார்த்த உடனேயே பறித்து தின்னும் இளம் வயது தான். ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் ,அணிந்திருந்தாள். துப்பட்டாவை எதற்கு பயன்படுத்த வேண்டுமோ...அதற்கு பயன்படுத்தாமல், அவள் கழுத்தை சுற்றி போட்டு இருந்தாள். அவள் கழுத்திலும் மெல்லிய நகைகள். ஒரு லெதர் வாட்ச். முடியை தூக்கி வாரி ஒரு கிளிப்பில் மாட்டிருந்தாள். ஹீல்ஸ் செருப்பு அவளை அரேபியன் குதிரை போல் தான் காட்டியது. எளிமையான அலங்காரத்தில் இருந்தாலும் வயதின் வளர்ச்சியும் இளமையின் துடிப்புமாக மிக எடுப்பாக தான் இருந்தாள்.அதிலும் மழையில் தயவால் அவள் ஆடை உடலோடு ஒட்டி நின்ற கோலம் அவளை ஒரு மார்க்கமாகவே காட்டின.
திரும்பியவன்...
கைதட்டி அவசரமாக போன ஆட்டோ ஒன்றை அழைக்க ...
அவனைக் கண்டதும் ஆட்டோக்காரன் சட்டுனு நிறுத்த.
“என்னடா சவாரியா.”..
“ஆமாண்ணே...”
என்றவன்.
“என்னண்ணே.. இந்த நடுராத்திரியில இங்க நிக்குறா... பக்கத்துல வேற பார்ட்டி சூப்பரா இருக்குது. என்னென்ன... சூப்பர் பார்ட்டி புடிச்சிட்டா போல...”
ஆட்டோக்காரன் வழிய...
குடலை புரட்டியது பிரியங்காவுக்கு. அதிலும் அவன் பற்களில் தெரிந்த பான்பராக்கு கறையும்...அதை காட்டிக் கொண்டு இழித்த தினுசும் அவளை கலங்கடிக்க..
ஆட்டோக்காரன் கேட்ட கேள்வி ஒன்றுக்கும் பதில் சொல்லாதவன்
“சவாரிக்காப் போறா...”
“ஆமா அண்ணே....”
“எங்க..”.
“கரிசல்பட்டி.”
“அந்த பக்கம் தான் இவ வீடு இருக்கு. போகிற வழியில் இறக்கி விடுறியா.?..”
“அண்ணாத்தைக்கு செய்யாம எப்படி. ஏற சொல்லுங்க. நானும் தனியா போவேன்னு நினைச்சேன். பேச்சு துணைக்கு ஆள் கிடைத்தது. அந்த இடம் தானே இறக்கி விடுறேன்.”
அவன் பேச்சில் நயமும், அவன் விழிப்பின் கோலமும்...அவளுள் பயத்தை விதைக்க...
“இல்ல...வேணாம்...வேணாம்...நான் இவரோட போகமாட்டேன்.” சொல்லியவாறு பின்னோக்கி நகர...கடுப்பானவன்
“ஏன்?..”என்றான் அடி குரலில்.
“இவனை பார்த்தா பயமா இருக்கு. என்னால எல்லாம் இவனை நம்பி போக முடியாது.”
பிரியங்கா பயந்து விலக...
“போக முடியாதுன்னா...”
“போக முடியாதுன்னா போக முடியாது தான். எத்தனை பேப்பர்ல எல்லாம் படிச்சிருக்கேன். இப்படி தனியா வருகிற பொண்ணுங்களை இப்படி ஆட்டோவில ஏற்றி....ஆட்டோல.!...”..
அவள் இழுவையாக நிறுத்த... கேள்விக்குறியோடு அவனும் அவளை பார்க்க அவளும் சொல்ல முடியாமல் திணற...
“ரொம்ப விவரம் தான். இவ்வளவு விவரமானவா... இந்த அத்த ராத்திரில ஏன் தனியா வெளியில் வந்தா. இது தப்புன்னு எந்த பேப்பர்லயும் போடலையோ..”.
“நான் சரியா தான் வந்தேன். நான் வந்த பஸ் மட்டும் பிரேக் டவுன் ஆகலணா...நான் சரியான நேரம் வந்து திருநெல்வேலியில சேர்ந்திருப்பேன். என் ஊருக்கு போற கடைசி பஸ்ஸையும் மிஸ் பண்ணி இருக்கமாட்டேன்.”
“அதுலயும் தப்பு உன் மேல இல்ல....”
“நான் என்ன தப்பு பண்ணுனேன் ...”
அப்பாவியாக அவள் கேட்க... அவளை ஒரு முறை பார்த்தவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு,
“வயசு பொண்ணு போகிற வழியில் ஆயிரம் பிரச்சனை வரலாம். அதுல நைட் டிராவல் எல்லாம் வேணாம். தனியா வேற போறோம். காலையில கிளம்புவோம்ணு தோணாதா...”
“எப்படி தோணும்..நாளைக்கு காலையில கிளம்பினா.. அப்புறம் ஒரே ஒரு நாள் தான் வீட்டில தங்க முடியும். அடுத்து உடனே கிளம்பிட வேண்டியது தான்.”
அதற்கு மேல் வாதாட மனம் இன்றி...பேச்சை நிறுத்தியவன். திரும்ப… சிறு யோசனைக்கு பின்...
“சரி...வா...”
“எங்க கூப்பிடுறீங்க....”
பையை மார்பின் மேல் தூக்கிப் பிடித்தவாறு பயந்தது போல் கேட்க...
“ஏன்?...சொன்னா தான் வருவியா...”
“அப்புறம் நீங்க எங்க கூப்பிட்டாலும் எப்படி வர முடியும்? ..”.
“ரொம்பத்தான்...”.
சலித்துக் கொண்டவன் .சிறிது நேரத்திற்கு பின்...
“எங்க வீட்டுக்கு தான்.”
“உங்க வீட்டுக்கா...உங்க வீட்டுக்கு நான் எப்படி?...”
“வரலணா...இதிலேயே நில்லு. கதிரவன் கண் முழிச்சதும் பொடி நடையா நடந்து ரெண்டு கிலோமீட்டர் அப்பால மெயின் ரோடு வரும். அதுல எப்பவும் வண்டி வரும். புடிச்சி ஊர் போய் சேரு.”
“அதுவரை இதுல தனியாவா நிக்கிறது...”
“ஆமா...நீங்க தான் விவரத்துல கூடுனவங்களாச்சே..அப்புறம் நாங்க என்ன பண்ண முடியும்.”
சொல்லிக்கொண்டு அவன் வேகம் வேகமாக நடக்க.. ஒரு நொடி நின்றவள். சுத்தி பார்த்தாள். அளவான இருளும்...ஆள் நடமாட்டம் இல்லாத இடமும் கிலியை மனதுக்குள் விதைக்க...திடுக்கிட்டவள். ஓடி அவன் அருகில் வந்து...
“உங்களை நம்பாம இல்லை. ஆனாலும்.!...”
பிரியங்கா இழுக்க...திருப்பிப் பார்த்து முறைத்தவன்.
“நீங்க ரொம்ப நல்லவருணு தெரியுது”.
என்றதும் மறுபடியும் திரும்பி நடக்க...
“உங்க பேர் என்ன..”.
“என் பேர் என்னன்னு சொன்னா தான் வருவியா?...”.
“அப்படி இல்ல...தெரிஞ்சுக்கலாம்னு...”.
“முத்துவேல்..”.
“முத்துவேல். சூப்பரா தான் இருக்கு”
“ஏன்...நல்லா இல்லணா போயிடுவியா...”
கடுப்பில் அவன் சொல்ல..
“ஏன் இப்ப இம்புட்டு கோபப்படுறீங்க...அப்படி நான் என்ன சொல்லி புட்டேன்.”
பாவமாக மூஞ்சியை வைத்து சொன்னதும். மனது இளங்கியவன். மறுபடியும் அமைதியாகி முன்னோக்கி நடக்க...
“ஆமா...உங்க வீட்ல யார் யார் இருக்கா.?...”
திக்கித் திணறி தான் கேட்டாள். ஆனால் அவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே...
“அம்மா..!..”.என்றாள்..
“இல்ல”
“இல்லையா!....”
“இறந்துட்டாங்க”
“இறந்துட்டாங்களா.?..”
“……………….”.
“அப்படின்ணா... அப்பா....”
“அவரும் இல்லை... அம்மா கூடவே கிளம்பிட்டாரு.”
“கிளம்பிட்டாரா..!...”
“……………”
“பொண்டாட்டி பிள்ளைங்க...”
என்றதும் சட்டுனு திரும்பிப் பார்த்து முறைக்க...
“இப்ப எதுக்கு முறைக்கிறீங்க. அவங்களும் போயிட்டாங்களா.?...”
பிரியங்கா நிஜமாகவே குழப்பமாக தான் கேட்டாள். ஆனால் கடுப்பானவன்
“என்ன பாத்தா... கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைகளுக்கு அப்பா மாதிரியா தோணுது”.
“அப்படின்ணா இன்னும் மேரேஜ் பண்ணிக்கலையா?...”
“இல்ல....”
“ஏன் பண்ணிக்கல...”
பிரியங்கா அப்பாவியாய் கேட்க...
“பேசாம நீ கிளம்பி ரோடு வழியா போ. இதுபோல 50 பேர் சுத்தி வளைப்பாங்க. அவங்க கிட்ட இருந்து தப்பி ஓடு. தப்பிச்சா...காலைல ஊருக்கு போய் சேரு. தப்பிக்கலணா.. ஏதாவது சாக்கடை பக்கம் தூக்கி போடுவாங்க. அதுல போய் தூங்கு”
“இப்ப நான் என்ன கேட்டுடேன்னு இம்புட்டு கோபம். ஒரு நாள் நைட் ஒரு ஆணோட தங்கப் போறேன். அங்க யாரெல்லாம் இருப்பாங்கன்னு தெரிஞ்சுக்கறது கூட தப்பா.”
சொன்னவள் மூஞ்சியை தூக்கிக் கொண்டு நடக்க....திடீரென ஒரு பயம் நெஞ்சுக்குள்...
அப்படின்னா இவனோட தனியாவா தங்க போறோம்.
மனசு திக்கென அடிக்க.. இப்போ அவள் நடையில் சோர்வு தெரிந்தது. அவனை தொடர்ந்து வந்தவள் பின் தங்க ஆரம்பித்தாள்
“என்ன அதிசயமா... ஆள் கொஞ்ச நேரமா அமைதியா வருது”.
என திரும்பி பார்த்தவன். அவள் வெகு தொலைவில் வருவதைப் பார்ப்பதும் சற்று நின்று அவள் வருவதற்காக காத்திருந்தான். அருகில் வந்தவள்...
“ஏன் போக வேண்டியது தானே.. எதுக்கு நீங்க நிக்குறீங்க. நாங்க தான் உங்களுக்கு அவஸ்தையா தானே இருக்கோம். அப்புறம் எதுக்கு வெயிட் பண்ணனும். கிளம்ப வேண்டியது தானே..”
“அது எப்படி?...அத்தராத்திரில பொட்ட புள்ளைய அதுவும் வயசுக்கு வந்த பொட்ட புள்ளைய விட்டுட்டு போக முடியும். சரி... இப்போ உனக்கு என்ன சந்தேகம். என் வீட்ல நான் தனியா இருக்கேன்னா அல்லது கூட யாராவது இருக்காங்களான்னு தானே. இங்க பாரு.”
அவள் தலைகுனிய...
“நான் தனியா இல்லை. கூட ஒரு அக்கா இருக்காங்க. இப்போதைக்கு நாங்க ரெண்டு பேரும் தான். சரி சொல்லு... என்னோட வர விருப்பமா?... “
அக்கா இருக்கிறார்கள் என்றதும் பயம் கொஞ்சம் விலக...
“நான் ஒண்ணும் சந்தேகப்படல. கேட்டேன்... தனியா இருக்க வேண்டி வருமோ என்று தெரிஞ்சிட தான் கேட்டேன்.”
“நம்பிட்டேன்... நம்பிட்டேன்....”
என முத்துவேல் முன்னே செல்ல... அதன் பின் எந்த கேள்வியும் கேட்காமல் அவனைத் தொடர்ந்து சென்றாள் பிரியங்கா. 10 நிமிட பயணத்திற்கு பின் ஒரு ஒலை குடிசையின் முன் வந்து நின்றான். முத்துவேலையும் அவ்வீட்டையும் திரும்பத் திரும்ப பார்த்தாள்.
“இதுதான் என் வீடு. உனக்கு சவுரியமா இருக்காது தான். உன் நடை உடை பார்த்தாலே தெரியுது. அதுக்கு என்ன பண்ண முடியும். போகிற இடம் எல்லாம் மெத்தையும், ஏஸியுமா கிடைக்கும். இருக்கிறதை அட்ஜஸ்ட் பண்ணிட்டு தங்கிட்டு போக வேண்டியது தான். சரி நான் வெளிய படுத்துகிறேன். நீ உள்ளால போ. “
“உள்ளாலையா?...”
“அப்புறம் எங்க வெளிலையா..படுக்க போறா.?..”
“இல்ல...”உங்க அக்கா...
“அவங்க உள்ளால தான் படுத்து இருப்பாங்க. நீ உள்ளால போ.”
“உள்ளாலையா!..”தயங்கி கொண்டு பிரியங்கா நிற்க...
“இப்ப என்ன...”
“அவங்கள கொஞ்சம் வெளியில கூப்பிடுறீங்களா?....”
“அவங்க வர மாட்டாங்க... நீ தான் உள்ளால போகணும்”.
“என்ன அவங்க வரமாட்டாங்களா!...”.ஏன்..?...வர மாட்டாங்க.
பொய் சொல்றானா?...இவன் உண்மையைச் சொல்றானா?...குழப்பமும் பயமும் மறுபடியும் நெஞ்சைத் தாவ அவனை பயம் கலந்து பார்த்தாள்.
“போய் படு..”.
என்று சொன்னதும் அவள் தயக்கத்தோடு கையை பிசைந்து கொண்டு நிற்க...
“காதுல விழல...”
“இல்ல... நான் போக மாட்டேன்..”.
பிரியங்கா வாயிலிருந்து வந்த வார்த்தையை கேட்டதும் கடும் கோபம் வர தீ பார்வையால் அவளை சுட்டான். அவன் தகதகப்பை பார்க்க முடியாமல் அவள் தலை குனிய...
என் கோபத்தை கிளராத...கடும் கோபத்தோடு அவளை நெருங்கி வந்தான். முத்துவேலுக்கு இவ்வளவு நேரம் இருந்த பொறுமை விடைபெற... கர்ண கொடூரமாய்க் காட்சி அளித்த அவனைக் கண்டவள் நடுநடுங்கிப் போனாள்.
“தெரியாமல் வந்து மாட்டிக்கிட்டோமோ!...”
என அவள் விழி பிதுங்கி நின்ற நேரம் முத்துவேல் அவளை நெருங்கி இருந்தான்.
அத்தியாயம் தொடரும் ….