JustPaste.it

குருக்கள் மடம் முதல் மலேசியா வரை! (M.S.M.பாயிஸ்)

கடந்த 08.03.2014 அன்று மலேசியாவிலிருந்து 239 பயணிகளுடன் சீனா நோக்கிப் புறப்பட்ட MH-370 என்ற மலேசிய விமானம் நடுவானில் வைத்து காணாமல் போனது. அந்த அதிர்ச்சி தகவலில் இருந்து இன்னும் பலர் விடுபடவே இல்லை. பல நாடுகள், நூற்றுக் கணக்கான விமானங்கள் மற்றும் போர்க்ப்பல்கள் செய்மதி தொழில் நுட்பம் என உலகிலுள்ள அனைத்து நவீன தொழில்நுட்ப சாதனங்களுடன் கடலுக்கு அடியில் வீழ்ந்திருக்கலாம் என நம்பப்படும் விமானத்தில் சிக்குண்டிருக்கும் பயணிகளின் உடல்களையாவது மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் தேடுதல் பணி தொடர்கிறது. நாமும் அதற்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம்.

12.07.1990ம் ஆண்டு கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கி வாகனங்களில் வந்த நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பொதுமக்கள் குருக்கள் மடம் அம்பலாந்துறை சந்தியில் வைத்து காணாமல் போனார்கள். பாசிசப் புலிப் பயங்கரவாதிகளினால் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள். 24 வருடங்கள் கடந்துவிட்ட போதும் இதுவரை அவர்கள் எங்கு புதைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் கிடைக்கவில்லை.

அன்று புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதி என்பதால் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதில் சில சிக்கல்கள் நிலவினாலும், இன்று நாட்டில் சமாதானம் நிலவுகிறது, புலிகள் கூண்டோடு அழிக்கப்பட்டு விட்டார்கள், நாடு சுபீட்சத்தை நோக்கிப் பயணிக்கிறது, மட்டக்களப்பு மாவட்டம் பாரிய வளர்ச்சியடைந்து வருகிறது என மார்பு தட்டும் இப்பகுதி ஆளும்கட்சி அரசியல்வாதிகளோ அரசாங்கமோ காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க இதுவரை எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு கூட தற்போது ஜெனீவாவில் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்குதல்களை சமாளிக்க எடுக்கும் கண்துடைப்பு முயற்சியாக இருக்குமோ என சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.

முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக நூற்றுக் கணக்கான உயிர்கள், பல இலட்சம் பெறுமதியான பொருட்கள், வாகனங்கள் என்பன புலிகளால் காவுகொள்ளப்பட்டது. இத்தனைக்கும் இந்த கடத்தல் விவகாரத்தின் சூத்திரதாரிகள் இன்று அரச மரியாதையோடு அரச உயர் பதவிகளில் அங்கம் வகிக்கிறார்கள். அதைவிட வேதனையான விடயம் என்னவென்றால் இக்கடத்தலை முன்னின்று நடாத்திய கருணா அம்மான் என்றழைக்கப்படும் பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் போன்றவர்களை அரசியல் சுய லாபத்திற்காக காத்தான்குடியில் உள்ள அரசியல்வாதிகளும் சில ஊர்த்தலைமைகளும் சில வருடங்களுக்கு முன் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தார்கள்.

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணிக்கு உதவத் தயார் என அண்மையில் இலங்கை அரசாங்கம் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது, வளர்ச்சியடைந்த மலேசியா போன்ற நாட்டின் விமானத்தை தேட உதவ முடியுமாக இருந்தால் ஏன் உள்நாட்டில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை?

மலேசிய விமானத்தில் காணாமல் போனவர்களின் உயிர் மட்டும்தான் பெறுமதியானதா? சில கிலோ மீட்டர்களுக்கு அப்பால் காணாமல் போன நமது உறவுகளின் உயிர்களின் பெறுமதி என்ன? நாங்கள் விடப்போவதில்லை, காணாமல் போன நூற்றுக் கணக்கான உயிர்களின் உடல் எச்சங்களையாவது இந்த அரசாங்கம் மீட்டுத் தரவேண்டும். காணாமல் போனவர்களுக்கு உரிய முறையில் நட்ட ஈடு பெற்றுக்கொடுக்க அரசாங்கத்துக்கு ''முட்டுக் கொடுத்து பிழைப்பு நடத்தும் முஸ்லிம் அரசியல்வாதிகள்'' முயற்சிக்க வேண்டும். அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகளாக இருக்கும் கருணா அம்மான் என அழைக்கப்படும் பிரதியமைச்சர் வினாயகமூர்த்து முரளீதரன், பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன், புலிகளின் சர்வதேச ஆயுத விநியோக முகவர் KP என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் போன்ற புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினர்களை உரிய முறையில் விசாரித்து உரிய தண்டனை வழங்க வேண்டும். இல்லாத பட்சம் இந்த விடயத்தை சர்வதேசத்துக்கு கொண்டு சென்று நீதி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.